(15. அந்த மூன்று வினாக்கள்)
[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்குசொடுக்கி படிக்கலாம்]
மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,
என்னுடைய முந்தைய பதிலில், முஹம்மது அற்புதம் செய்பவரல்ல என்று அல்லாஹ் ஆணித்தரமாகச் சொல்லும் குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினேன். குர்-ஆனுக்கு எதிராக ஹதீஸ்கள் போர்க்கொடி தூக்கியதையும் விளக்கினேன். இந்த கட்டுரையில் இஸ்லாத்தின் மையப்புள்ளி என்ன என்பதைப் பற்றி நீங்கள் எழுதியவைகளை ஆய்வு செய்யலாம் என்று விரும்புகின்றேன்.
பாரா அவர்கள் எழுதியவைகள்:
//ஆனால், சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.//
அற்புதங்கள் நிகழ்த்துவதை எப்படி இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைக்கமுடியும்? முஹம்மதுவினால் ஒரு அற்புதமும் செய்யமுடியாது என்று அல்லாஹ் குர்-ஆனில் தெளிவாக சொல்லிவிட்ட பிறகு, எப்படி அற்புதங்களை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது கருதமுடியும்? கடந்த கட்டுரையில், முஹம்மது செய்ததாகச் சொல்லும் 'சந்திரனை இரண்டாக பிளந்த' அற்புதம் என்பது குர்-ஆனின் அடிப்படையில் ஒரு பொய் என்பதை விளக்கினேன். பல சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களில், முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். மக்காவில் இறக்கிய குர்-ஆன் வசனங்களிலும், மதினாவில் இறக்கிய வசனங்களிலும் சரி, இதனை அல்லாஹ் தெளிவாகச் சொல்லியுள்ளான்.
முஹம்மது பல அற்புதங்களைச் செய்தார் என்றுச் சொல்லும் ஒவ்வொரு முஸ்லிமும், "குர்-ஆன் சொல்வது பொய்" என்று அடித்துச் சொல்கிறார் என்று அர்த்தம். முஹம்மதுவினால் முந்தைய நபிகளைப்போல அற்புதங்களைச் செய்யமுடியவில்லை என்பதால், "அற்புதங்கள் நிகழ்த்துவதை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைத்ததில்லை" என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் முஸ்லிம்கள். அதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள்.
பாரா அவர்கள் எழுதியவைகள்:
//இஸ்லாத்தின் மையம் என்பது குர்ஆன் தான்.//
இஸ்லாத்தின் மையம் குர்-ஆன் என்பதை 100% அங்கீகரிக்கமுடியாது. எதனை மையமாக வைக்கமுடியும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், "எது முழுமையாக உள்ளதோ, எதைக்கொண்டு ஒரு மார்க்கம் முழுமை அடைகின்றதோ" அதைத் தான் மையமாக கொள்ளமுடியும். ஆனால், குர்-ஆனை ஒரு போதும் இஸ்லாமின் மையமாக கொள்ளமுடியாது.
உங்களிடம் ஒரு தனிப்பட்ட கேள்வியைக் கேட்கிறேன். இஸ்லாமைத் தொட்டு, 100 தொடர்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை நீங்கள் எழுதியுள்ளீர்கள். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு, அல்லது கடைசி அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்பு, ஒரு முறையாவது குர்-ஆனை முழுவதுமாக நீங்கள் படித்தீர்களா? மேலும், குர்-ஆனின் அடிப்படைகளை அறிந்துக்கொள்வதற்கு நீங்கள் அதிகமாக படித்த புத்தகம் எது? குர்-ஆன் கண்டிப்பாக இருக்காது. குர்-ஆனை மட்டுமே படித்து, ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களையும் படிக்காமல் நீங்கள் நிலமெல்லாம் இரத்தம் எழுத ஆரம்பித்து இருந்திருந்தால், உங்களால் முஹம்மதுவைப் பற்றி ஒரு பக்கம் கூட எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.
இஸ்லாத்தின் மையப்புள்ளி என்று நீங்கள் சொல்லும் குர்-ஆனை மட்டுமே படித்து, ஒருவரால் ஒரு முஸ்லிமாக வாழமுடியாது. முஸ்லிமாக வாழ்வதை விடுங்கள், முதலாவது அவரால் முஸ்லிமாக மாறவே முடியாது. குர்-ஆனை மட்டும் படிப்பவனின் நிலை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டகதைத்தான்.
இஸ்லாத்தின் மையப்புள்ளியாக குர்-ஆனை கருதுவதைவிட, ஹதீஸ்களை கருதினால் தான் ஓரளவிற்கு சரியாக இருக்கும். இஸ்லாத்திற்கு குர்-ஆன் முக்கியம், ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல.
பாரா அவர்கள் எழுதியவைகள்:
//"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான் முகம்மதுக்கு முந்தைய நபியான இயேசுவை இறைவன் படைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்தச் சமயம், சொல்லிலிருந்து உதித்தவர், இறைத்தூதர். இம்முறை சொல்லிலிருந்து உதித்தது, குர்ஆன் என்கிற ஒரு வேதம். //
பாரா அவர்களே, உங்களின் மேற்கண்ட இரண்டு வாக்கியங்களை முஸ்லிம்கள் எப்படி புரிந்துக்கொண்டார்களோ, தெரியவில்லை. அவர்கள் அவைகளை சரியாக புரிந்துக்கொண்டு இருந்திருந்தால், உங்களுக்கு பிரச்சனையாக மாறியிருப்பார்கள்.
கிட்டத்தட்ட, மேற்கண்ட இரண்டு வாக்கியங்களில், இயேசுவின் தெய்வீகத்தன்மையை நீங்கள் மறைமுகமாக சொல்லிவிட்டதாக நான் கருதுகிறேன். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு, 'இயேசு யார்' என்பதைப் பற்றியதாகும். பைபிளின் படி, இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்கள் 'இயேசு அல்லாஹ்வின் வார்த்தை மூலமாக உண்டாக்கப்பட்டவர்' என்றுச் சொல்கிறார்கள்.
உங்களுடைய வரிகளின் படி, 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவர் இயேசு அல்ல, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக இருக்கிறார். இதைத்தான் கிறிஸ்தவர்ளும் நம்புகிறார்கள்.
'"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான்' என்ற உங்களின் வரியின் படி, அல்லாஹ் 'குன் (உண்டாகுக)' என்ற வார்த்தையின் மூலமாக இயேசு பிறக்கவில்லை, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக வந்தார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், குர்-ஆன் முஸ்லிம்களுக்கு எதிராகத் தான் சாட்சி சொல்கிறது. அதாவது இயேசு அல்லாஹ்வின் வார்த்தை என்று குர்-ஆன் சொல்கிறது.
இயேசு அல்லாஹ்வின் 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவரா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தையே இயேசுவா? என்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட தமிழ் கட்டுரைகள் பதில் அளிக்கும்.
1) இயேசு இறைவனா? குர்ஆன் இறைவனா? (ஏன் உமர் தன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் என்று பெயரை வைத்தார்?)
பாரா அவர்கள் எழுதியவைகள்:
//ஆக, குர்ஆன்தான் முக்கியமே தவிர, நிகழ்த்தப்படும் அற்புதங்களல்ல. நிகழ்த்துபவருமல்ல.இதை, மற்ற யாரையும்விட முகம்மது மிக நன்றாக உணர்ந்திருந்தார். தாம் இறைவனால் இஸ்லாத்தை விளக்கவும் பரப்பவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்தார். ஆகவே, தன் மூலமாக நிகழ்த்தப்படும் எதற்கும் தான் உரிமை கொள்வதற்கோ பெருமைப்படுவதற்கோ ஏதுமில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் அவர்.//
பாரா அவர்களே, ஒரு முக்கியமான விவரத்தை மறந்து நீங்கள் எழுதுகிறீர்கள் அல்லது மறைத்து எழுதுகிறீர்கள். வேதம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதனை கொண்டு வந்தவரால் செய்யப்படும் அற்புதங்களும் முக்கியம். மதம் என்பது தவறான மனிதனின் கையில் அகப்பட்டுக்கொண்டால், அதிகமாக தீமைகள் நடக்கும் என்பதால், அற்புதங்கள் தேவைப்படுகின்றன. எப்படி என்பதை இப்போது சுருக்கமாக விளக்குகிறேன்.
அ) மோசேயை தேவன் நபியாக நியமித்து, எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களை விடுவித்துக்கொண்டு வா? என்றுச் சொல்கிறார்.
ஆ) மோசே சென்று அழைக்கும் போது, உடனே பல இலட்சங்கள் இருக்கும் இஸ்ரேல் மக்கள் இவரின் பின்னால் கேள்வி கேட்காமல் வந்துவிடுவார்களா?
இ) எங்களை அழைப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நீ உண்மையாகவே தேவன் அனுப்பிய நபியா இல்லையா என்பதை நாங்கள் எப்படி அறிந்துக்கொள்வது? என்று இஸ்ரேல் மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா? இது நியாயமான கேள்வி தானே! எவனோ ஒரு பைத்தியக்காரன் வருவான், அவன் அழைத்தால் கேள்வி கேட்காமல், அவனது தகுதி என்னவென்று சரி பார்க்காமல் அவன் பின்னே போனால், தீமையல்லவா நடக்கும்?
ஈ) எனவே தான், தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது, மோசே தேவனிடம் கேட்ட முதலாவது கேள்வி – என்னை அவர்கள் நம்பவில்லையென்றுச் சொன்னால், நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்று நான் எப்படி நிருபிப்பது? என்று கேட்டார்.
உ) 'அற்புதங்கள் செய்யமுடியாது' என்று தேவன் சொல்லாமல், பல அற்புதங்களோடு மோசேயை அனுப்பினார், பார்க்க யாத்திராகமம் 4: 1-9 .
ஊ) இதே போலத் தான் இயேசுவும் பல அற்புதங்கள் செய்து, தான் ஒரு மேசியா என்பதை நிரூபித்தார். ஆகையால், முஹம்மது ஒரு நபி என்று சொல்லிக்கொண்டால், தன்னிடம் அற்புதம் கேட்பவர்களுக்காக சில அற்புதங்கள் செய்தே ஆகவேண்டும். ஆனால், குர்-ஆனின் படி, இப்படி நடக்கவில்லை, எனவே தான், முஹம்மது ஒரு கள்ள நபி என்று அன்றைய கிறிஸ்தவர்களும், யூதர்களும் அவரை நம்பவில்லை. இன்றும் அதே நிலை தான்.
இதைப் பற்றி கீழ்கண்ட தமிழ் கட்டுரையில் நான் தெளிவாக விளக்கியுள்ளேன்:
முடிவுரை:
பாரா அவர்களே, நீங்கள் இஸ்லாமை அறியும் விதத்தில் அறியவில்லை. கிறிஸ்தவத்தை புரிந்துக்கொள்ளும் விதத்தில் புரிந்துக் கொள்ளவில்லை எனவே தான் உங்களின் ஒவ்வொரு இறையியல் வரிகளுக்கு பதில்கள் சொல்லவேண்டி இருக்கிறது. அரைகுறை அறிவு ஆபத்து என்றுச் சொல்வார்களே, அது போல, முஸ்லிம்கள் சொல்லும் இஸ்லாமை மட்டும் கற்றுக்கொண்டு தொடர்களை எழுதியுள்ளீர்கள். உண்மையான இஸ்லாமை அறியாமல் இருந்துவிட்டீர்கள். எனவே, நான் எழுதிக்கொண்டு இருக்கும் இத்தொடர் கட்டுரைகளை படித்தால், நீங்கள் விட்டுவிட்ட சில இஸ்லாமிய விவரங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இஸ்லாம் பற்றி எதிர்காலத்தில் எழுதப்போகும் புத்தகங்களுக்கு அடித்தளமாக இவ்விவரங்கள் உங்களுக்கு உதவும். இவைகளை மனதில் பதித்துக்கொண்டு நீங்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய புத்தங்களை எழுதினால், எதிர்காலத்தில் என்னைப்போன்றவர்கள் உங்களுக்கு இப்படிப்பட்ட பதில்களை கொடுக்க வேண்டிய அவசியம் உண்டாகாது.
உங்களை அடித்த பதிலில் சந்திக்கிறேன்.
2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்
உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan13.html
No comments:
Post a Comment