(அத்தியாயம் 6. பிரித்து ஆளும் சூழ்ச்சி)
மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,
"நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்குபடிக்கலாம்.
இந்த கட்டுரையில் "பிரித்து ஆளும் சூழ்ச்சி" என்ற ஆறாவது அத்தியாயத்தில் நீங்கள் முன்வைத்த சில விஷத்துளிகளைப் பற்றி காண்போம்.
உங்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால், இஸ்லாமை நீங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் விருப்பம், ஆனால், அதற்காக யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் விரிசல்களை உருவாக்காதீர்கள். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றி உண்மைக்கு மாறானவைகளை எழுதாதீர்கள்.
பாரா அவர்கள் எழுதியது:
//முக்கியமாக, "இயேசுவைக் கொன்றவர்கள்" என்று கிறிஸ்தவப் பிரசாரகர்கள் மிகத்தீவிரமாக உலகெங்கும் சொல்லிக்கொண்டு போனது மாபெரும் அவமானமாக அவர்களின் வாழ்வின் மீது கவிந்து நின்றது.
. . .
இயேசுவைப் பின்பற்றி, அவர் பேசிய மொழிகளின் அடியற்றி வாழ முடிவெடுத்தவர்கள், கிறிஸ்தவர்கள் எனப்பட்டார்கள். அவர்களேதான் மிச்சமுள்ள தமது பூர்வீகக் குலத்தவரை அப்படிப் பழிக்கவும் தொடங்கினார்கள். வேற்று இனத்தவர்கள் அல்லர். முக்கியமாக, அராபியர்கள் அல்லர். (அத்தியாயம் 6. பிரித்து ஆளும் சூழ்ச்சி)//
ஆதி கிறிஸ்தவர்கள் யூதர்களை பழித்தார்களா?
உங்களுடைய வரிகளில் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள்:
1) "இயேசுவைக் கொன்றவர்கள்" என்று கிறிஸ்தவப் பிரசாரகர்கள் மிகத்தீவிரமாக உலகெங்கும் சொல்லிக்கொண்டு போனார்கள்
2) கிறிஸ்தவர்கள் தமது பூர்வீக குலத்தவரை (யூதர்களை) பழித்தார்கள்
ஒரு பக்கம், அக்காலத்தில் அனேக யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள் என்றுச் சொல்கிறீர்கள், ஆனால், இன்னொரு பக்கம் கிறிஸ்தவர்கள் யூதர்களை பழித்துக்கொண்டு இருந்தார்கள் என்றுச் சொல்கிறீர்கள். இது முரண்பாடு அல்லவா? கிறிஸ்தவர்கள் யூதர்களைப் பார்த்து "இயேசுவை கொன்றவர்கள்" என்று மிகத்தீவிரவாக பழித்தால், அதிக எண்ணிக்கையில் யூதர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக மாறுவார்கள்?
எவ்விதம் யூதர்கள் கிறிஸ்தவர்களானார்கள் என்பதை நீங்கள் விவரிப்பதை, இங்கு தருகிறேன்.
//பாரா அவர்கள் எழுதியது:
5] கிருஸ்துவமும் யூதர்களும்:
கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை. கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். (நிலமெல்லாம் இரத்தம், 5] கிருஸ்துவமும் யூதர்களும்)
7] புத்தியால் வெல்வது:
முதலில் இனம் அழியாமல் காப்பதல்லவா முக்கியம்? மதம் காணாமல் போய்விடாதவாறு தடுப்பதல்லவா முக்கியம்?
அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது! காட்டுத்தீ மாதிரி மத்தியக் கிழக்கு முழுவதும் கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்தது. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல அராபிய இனக்குழுக்களும் மொத்தமாக கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டிருந்தன. (நிலமெல்லாம் இரத்தம், 7] புத்தியால் வெல்வது)//
பாரா அவர்களே! நடுநிலையோடு நீங்கள் எழுதவில்லை. உங்களுக்கு நான் இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் சொல்லித்தரவேண்டி இருக்கிறது. இந்த இரண்டும், உங்கள் அனைத்து கட்டுரைகளுக்கும், நான் பதில் தரும்போது ஓரளவிற்கு நிறைவேறி விடும்.
கிறிஸ்தவர்கள் "யூத எதிர்ப்பு கொள்கையை "(Antisemitism) ஆதரிக்கும் மக்களாக காட்ட நீங்கள் முயன்றுள்ளீர்கள், அதே நேரத்தில், அரேபியர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று சொல்ல முயன்றுள்ளீர்கள்.
"இயேசுவை கொன்றவர்கள்" என்று யூதர்களை தீவிரவாக பழித்துக்கொண்டு இயேசுவின் சீடர்கள் பிரச்சாரம் செய்தார்கள் என்று நீங்கள் குற்றம் சாட்டினீர்கள். எனவே, புதிய ஏற்பாடும், இயேசுவின் சீடர்களாகிய ஆரம்பகால கிறிஸ்தவர்களும் யூதர்கள் பற்றி எப்படிப்பட்ட கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை சுருக்கமாக எழுத விரும்புகிறேன். புதிய ஏற்பாடு தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு அடித்தளம். எனவே, புதிய ஏற்பாட்டின் போதனைகளைத் தான் கிறிஸ்தவர்கள் பின்பற்றுவார்கள்.
புதிய ஏற்பாடும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் யூதர்களை வெறுத்தார்களா? பழித்தார்களா?
(ஆன்டி செமிடிஸத்தை ஆதரித்தார்களா?)
அ) யூதர்களின் வேதத்தை படித்துக்கொண்டு யூதர்களை எப்படி வெறுக்கமுடியும்?
கிறிஸ்தவர்களின் பைபிளில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்ற இரு பிரிவுகள் உள்ளன. பழைய ஏற்பாடு என்பது யூதர்கள் தனக் (Tanakh) என்றுச் சொல்லும் அவர்களின் வேதம் தான். யூதர்களின் வேதத்திலிருந்து அதாவது பழைய ஏற்பாட்டிலிருந்து "யூத எதிர்ப்பு கொள்கையை" ஆதரிக்கும் விவரங்களை யாராது காணமுடியுமா? முடியாதல்லவா!
புதிய ஏற்பாட்டை விட பழைய ஏற்பாடு மூன்று மடங்கு பெரியது. கிறிஸ்தவர்களின் பைபிள் தன்னிடம் ¾ பாகம் யூதர்களின் வேதத்தை (பழைய ஏற்பாட்டை) வைத்துக்கொண்டு, எப்படி அது யூதர்களுக்கு எதிராக பேசமுடியும்? புரியும் படி சொல்கிறேன், பைபிளின் கால்பாகம் (¼ புதிய ஏற்பாடு) எப்படி பைபிளின் முக்கால் பாகத்தை (¾ பழைய ஏற்பாடு) எதிர்க்கமுடியும்?
- யூதர்களின் முற்பிதாக்கள் கிறிஸ்தவர்களுக்கு வழிக்காட்டிகள்.
- யூதர்களின் முற்பிதா ஆபிரகாம் கிறிஸ்தவர்களின் விசுவாச தந்தை.
- யூதர்கள் ஆபிரகாமின் இரத்த சம்மந்தமுள்ள சந்ததி, கிறிஸ்தவர்கள் ஆன்மீக (ஆவிக்குரிய) வகையில் ஆபிரகாமின் சந்ததி.
- யூதர்களின் தீர்க்கதரிசிகள் கிறிஸ்தவர்களின் தீர்க்கதரிசிகள்.
- யூதர்களின் வேதம் கிறிஸ்தவர்களின் வேதத்தின் முக்கால் பாகம்.
- யூதர்களின் மேசியா கிறிஸ்தவர்களுக்கு இரட்சகர்.
- யூதர்களாகிய இயேசுவின் சீடர்கள், கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலர்கள், திருச்சபைக்கு அஸ்திபாரங்கள்.
- யூத மண், கிறிஸ்தவர்களின் இரட்சகர் நடந்த புனித பூமி.
இப்படி இருக்க, கிறிஸ்தவர்களோ, புதிய ஏற்பாடோ எப்படி, "யூத எதிர்ப்பு கொள்கையை" ஆதரிக்கும்?
ஆ) இயேசு யூதர்களை வெறுத்தாரா?
இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது:
ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு பேசிக்கொண்டு இருந்தார். இவ்விருவர் தேவனை எந்த இடத்தில் தொழுதுக்கொள்வது சரியானது? என்ற தலைப்பு பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண் "சமாரியாவில் தொழுதுக்கொள்ளவேண்டும்" என்றுச் சொன்னாள். ஆனால், யூதர்கள் ஜெருசலேமில் தொழுதுக்கொள்ளவேண்டுமென்று சொல்கிறார்களே! இதில் எது சரியானது என்று அவள் கேட்டாள். இயேசு சுருக்கமான வார்த்தைகளில் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறினார்:
நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (யோவான் 4:22)
இங்கு "நாங்கள்" என்று இயேசு சொன்னபோது, தன்னையும் ஒரு யூதனாகவே அடையாளப்படுத்துகிறார். இவர் எப்படி யூதர்களை வெறுக்கமுடியும்? இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது என்று அவர் சொன்ன போது, மேசியா யூதர்களின் வழியாக வருகிறார் என்பதை தெரிவிக்கிறார், அதாவது தன் மூலமாகத் தான் இரட்சிப்பு வரும் என்றுச் சொல்கிறார். இயேசு யூதர்களின் "தனக் வேதத்தில்" சொல்லப்பட்டவைகளை நிறைவேற்ற வந்தாரே ஒழிய அதனை அழிக்க அல்ல (மத்தேயு 5:17). இந்த உரையாடலின் கடைசியில் "சமாரியர்களும், யூதர்களும் எதிர்ப்பார்த்திருந்த மேசியா தாம் தான்" என்ற உண்மையை, அந்த பெண்ணிடம் உவமைகளாக அல்லாமல், தெளிவாக வெளிப்படுத்திவிட்டார். உலகத்திற்கான இரட்சகன் யூத வம்சத்திலிருந்து வந்தார் என்பது தான் இயேசுவைப் பற்றிய பூர்வீக விலாசம்.
இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது என்று 100% நம்பும் கிறிஸ்தவர்கள் எப்படி "யூத எதிர்ப்பு கொள்கையை" ஆதரிப்பார்கள்?
இ) இயேசு யூதர்களை கடிந்துக்கொண்டது ஏன்?
முதல் நூற்றாண்டின் இஸ்ரேல் யூதர்கள் இயேசுவை புறக்கணித்தார்கள். தாங்களாகவே பல பாரம்பரியங்களை உருவாக்கிக்கொண்டும், தேவாலயத்தில் வியாபாரத்தை அனுமதித்துக்கொண்டும், தாங்கள் தான் நீதிமான்கள், மற்றவர்கள் எல்லோரும் பாவிகள் என்ற எண்ணத்தில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலைப்பாட்டை இயேசு விமர்சித்தார், வேதவாக்கியங்களை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள் என்று அவர்களை கடிந்துக்கொண்டார்.
ஒரு மனிதனின் பிழைகளை சுட்டிக்கட்டி கடிந்துக் கொள்வது என்பது வேறு, அந்த மனிதனையே வெறுத்துத்தள்ளுவது என்பது வேறு. இயேசு பிழைகளை சுட்டிக்காட்டினார், ஆனால் யூதர்களை வேறுத்துத் தள்ளவில்லை.
பிள்ளைகள் மதுபானம் குடித்து வெறுத்து, புகைபிடித்து தங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளும் போது, பெற்றோர்கள் அவர்களை கண்டிக்கிறார்கள், திட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படியே அழிந்துவிடவேண்டுமென்று பெற்றோர்கள் விரும்புவது இல்லை. இதைத்தான் இயேசுவும் செய்தார். அடிக்கிற கைதான் அனைக்கும் என்பார்களே, அது போல.
இயேசு அனேக யூதர்களை மெச்சிக்கொண்டார், அதுவும் அவர்கள் யூதமதத்தலைவர்களாக இருந்தார்கள், ஆனால், உண்மையான மனதுடன் சத்தியத்தை அறிந்துக்கொள்ள விரும்பினார்கள். இரகசியமாகவும் சில யூத மத தலைவர்கள் இயேசுவை பின்பற்றிக்கொண்டு இருந்தார்கள்.
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.(யோவான் 1:47)
யூத மதத்தலைவர்கள் சொல்வதை செய்யுங்கள் என்று சீடர்களுக்கும், இதர ஜனங்களுக்கும் இயேசு கட்டளையிட்டார், ஆனால் அவர்களின் செய்கைகளை பின்பற்றாதிருங்கள் என்றார்.
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். (மத்தேயு 23:1-3)
எனவே, இயேசு யூதர்களை வெறுத்தார் என்பது ஆதாரமற்ற கூற்றாகும். யூதர்களை மட்டுமல்ல, உலக மக்கள் எவரையும் அவர் வெறுப்பதில்லை, ஏனென்றால், அவர் படைத்த படைப்பாயிற்றே!
ஈ) யூதர்களுக்காக கண்ணீர் விட்ட இயேசு:
ஆரம்ப முதல் யூதர்களை கடிந்துக்கொண்ட இயேசு, கடைசி நேரத்தில் அவர்கள் மேசியாவை அறிந்துக்கொள்ளாமல் இருந்ததைக் கண்டு, அவர்கள் மேல் வரவிருக்கும் ஆபத்தைப் பார்த்து கண்ணீர் விட்டார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமிடம் செய்த உடன்படிக்கையாயிற்றே, அதனை எப்படி மறக்கமுடியும்?
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. ( லூக்கா 19:41-42)
உ) இறைவனுடைய வார்த்தைகள் யூதர்கள் வழியாக வந்தது:
இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது என்று இயேசு கூறினார். இங்கு புதிய ஏற்பாடு சொல்வதை கவனியுங்கள். தேவனுடைய வார்த்தைகள் அவர்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மோசேவிடம் கர்த்தர் கொடுத்த 10 கட்டளைகள் தொடங்கி, பழைய ஏற்பாடு முழுவதுமான தேவனுடைய வார்த்தைகள் யூதர்களிடம் தான் ஒப்புவிக்கப்பட்டது, இது தான் மேன்மை.
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. (ரோமர் 3:1-2)
யூதர்கள் பற்றி இப்படிப்பட்ட மேன்மையான வார்த்தைகளைச் சொல்லும் புதிய ஏற்பாடு, எப்படி "யூத எதிர்ப்பு கொள்கையை" ஆதரிக்கும்?
ஊ) இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த பரிசுகள், யூதர்கள் வழியாகவே வந்தன:
இரட்சிப்பு மட்டுமல்ல, இறைவன் உலக மக்களுக்கு கொடுத்த இதர பரிசுகளும் யூதர்கள் வழியாகவே வந்தது என்று புதிய ஏற்பாடு சாட்சி பகருகிறது.
அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9:4-5)
யூதர்களுக்குத் தான் புத்திரசுவிகாரம், மகிமை, உடன்படிக்கைகள், நியாயப்பிரமாணம், தேவாராதனைகள், வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டது, மேலும், அவர்கள் மூலமாக, இவைகள் அனைத்தும் இதர உலக மக்களுக்கு கிடைத்தது.
மேற்கண்ட பட்டியலில், கடைசியாக சொன்ன பரிசு 'கிறிஸ்து' ஆவார். இன்றைக்கு யூதர்கள் மேசியா தான் இயேசு என்று நம்பாமல் இருந்தாலும், அவர்களுக்கு நாம் (கிறிஸ்தவர்கள்) நன்றிச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம், ஏனென்றால், மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தபடியினால். தேவன் இவ்வுலகில் மனிதனாக வரமுடிவு செய்தபோது, அவர் தேவதூதராக வராமல், ஆபிரகாமின் சந்ததில் வந்தார், யூத வம்சத்தில் தாவீதின் மகனாக வந்தார் (எபிரேயர் 2:16, மத்தேயு 1:1).
தங்கள் அருமை இரட்சகரை கொடுத்த யூதர்களை எப்படி கிறிஸ்தவர்கள் பகைத்துக்கொள்வார்கள்? எப்படி அவர்களை வெறுத்துதள்ளுவார்கள்? நிச்சயமாக இல்லை. இது ஒரு புறம் இருக்க, அந்த இரட்சகர் சொன்னது போல, எந்த மக்களையும் வெறுப்பது கிறிஸ்தவர்களுக்கு தூரமானதாகும்.
எ) யூதர்களை தேவன் புறக்கணித்துவிட்டாரா?
கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் இருக்கிறது. தேவன் ஆபிரகாமிடம் "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்." என்று கூறினார் (ஆதியாகமம் 12:3).
புதிய ஏற்பாட்டிலும் கவனிக்கும் போது, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, சீடர்கள் அவரிடம் ". . . ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்." (அப் 1:6). அதற்கு இயேசு, யூதர்களையும், இஸ்ரேலையும் மறந்துவிடுங்கள், இனி அவர்கள் என் பட்டியலில் (உடன்படிக்கையில்) இல்லை என்றுச் சொல்லாமல், கீழ்கண்டவாறு கூறினார்:
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. (அப் 1:7)
இஸ்ரேலுக்கு விடுதலை வரும், ஆனால், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில் அது வரும் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார், யூதர்களை முழுவதுமாக மறந்துவிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. புதிய ஏற்பாட்டின் ரோமருக்கு எழுதின நிருபத்தில் இவ்விதமாக கூறப்பட்டுள்ளது:
. . . அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். (ரோமர் 11:25)
அதாவது, யூதரல்லாத இதர உலக மக்கள் இயேசு மூலமாக வரும் இரட்சிப்பு பெற்று, அதன் நிறைவு ஒரு அளவிற்கு வரும்வரை, இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாகும் (அவர்கள் இரட்சகரை அறிந்துக் கொள்ளமாட்டார்கள்). யூதரல்லாத மக்களின் நிறைவு வரும் போது,
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. (ரோமர் 11:26-27)
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே (ரோமர் 11:1).
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. (ரோமர் 11:2)
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. (ரோமர் 11:5).
எனவே, தேவன் இஸ்ரவேலர்களை தள்ளிவிடவில்லை. இப்படி இருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி யூதர்களை வெறுக்கமுடியும்? அவர்களை எப்படி பழிக்கமுடியும்?
ஏ) ஆரம்ப கால சீடர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுத்தார்களா?
இயேசு மட்டுமல்ல, அவரது சீடர்களும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் யூதர்களை வெறுக்கவில்லை, "யூத எதிர்ப்பு கொள்கையை" ஆதரிக்கவில்லை.
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. (ரோமர் 10:1)
யூதர்கள் இயேசுவை மேசியாவாக அங்கீகரிக்கவேண்டுமென்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துடித்தார்கள். இங்கே பாருங்கள், உண்மையான அன்பின் இன்னொரு வெளிப்பாடு. யூதர்கள் இரட்சிக்கப்படுவார்களானால், நான் சபிக்கப்படவும் தயாராக இருக்கிறேன் என்கிறார், அப்போஸ்தலர் பவுல்.
எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. (ரோமர் 9:1-3)
இவைகளை படித்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக செயல்படமுடியும்?
புதிய ஏற்பாட்டின் இறையியல் என்ன?
கடைசியாக, பாரா அவர்களே, உங்களுக்கு புதிய ஏற்பாட்டின் இறையியலை சிறிது விளக்கவேண்டியுள்ளது.
இயேசுவின் பிரதான சீடராகிய பேதுரு "இயேசுவை கொலை செய்த யூதர்களிடம் எப்படி பேசினார்" என்பதை பாருங்கள்.
இயேசு கொலை செய்யப்பட யூதர்கள் காரணமாக இருந்தது உண்மையே! ஆனால், கிறிஸ்தவர்கள் இதனை எப்படி பார்க்கவேண்டும்? இதற்கு பேதுரு பதில் சொல்வதை பாருங்கள்.
1) தேவனின் திட்டம் மற்றும் முன்னறிவிப்பு
2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். (அப்போஸ்தலர் நடபடிகள் 2:23, 36)
முதன் முதலாக யூதர்களுக்கு பேதுரு பிரசங்கம் செய்கிறார். "இஸ்ரவேலரே நீங்கள் இயேசுவை கொலை செய்தீர்கள் உண்மையே! ஆனால், அது தேவனின் திட்டம், மேலும் அவர் இதைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார் எனவே, உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையோ அல்லது குற்ற உணர்வோ தேவையில்லை" என்று பிரசங்கம் செய்தார். இந்த பிரசங்கத்தைக் கேட்டு 3000 பேர் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். நீங்கள் இயேசுவை கொலை செய்தீர்கள், நீங்கள் குற்றவாளிகள் தான் என்று பழித்திருந்தால், இப்படி யூதர்கள் முதல் பிரசங்கத்திலேயே இயேசுவை ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்களா?
இயேசுவை கொலை செய்ததற்கு யூதர்கள் எந்த அளவுக்கு பொறுப்பு வகிக்கவேண்டுமோ, அதே போல, தேவனும் பொறுப்பு வகிக்கவேண்டும், ஏனென்றால், உலக மக்களை இரட்சிக்க மேசியா மரிக்கவேண்டியது அவசியம். எனவே, இயேசுவை கொலை செய்ததில் யூதர்களுக்கும் மற்றும் தேவனுக்கும் 50-50 பங்கு ஆகும்.
யூதர்கள் வெறும் அம்பு தான், எய்தவர் தேவனாவார். தேவன் தான் அவரை நொறுக்க சித்தமானார். இதனை கிறிஸ்தவர்கள் சரியாக புரிந்துக்கொண்டுள்ளார்கள். எனவே, யூதர்கள் மீது தேவையில்லாத வெறுப்பை கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.
ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
2) அறியாமையில் கொலை செய்த யூதர்கள்
இதே பேதுரு, இன்னொரு இடத்தில் எப்படி யூதர்களுக்கு பிரசங்கம் செய்கிறார் என்று பாருங்கள். யூதர்கள் அறியாமல் கொலை செய்தார்கள் என்றுச் சொல்கிறார்.
3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
3:17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
3:18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 3:15,17,18)
எனவே, கிறிஸ்தவர்கள் யூதர்களை பழிக்கவில்லை என்பது இதன் மூலம் அறியலாம்.
3) யூதர்கள் கொலை செய்த இயேசுவே, இஸ்ரவேலுக்கு இரட்சகரானார்:
இன்னொரு இடத்திலும் பேதுரு இதையே பிரதிபலித்தார். இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பும் அளிக்கும்படியே இயேசு மரணத்திலிருந்து எழும்பினார்.
5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 5:30-31)
கடைசியாக, இயேசு சிலுவையில் தம் உயிரை கொடுப்பதற்கு முன்பே, யூதர்களை மன்னித்துவிட்டார். பிதாவே இவர்களை மன்னியும் என்றுச் சொல்லிவிட்டு தான் அவர் மரித்தார். இயேசு மன்னித்த மக்களை குற்றப்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அதிகாரமில்லை.
மேற்கண்டவிதமான அஸ்திபாரத்தின் மீதுதான் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்கள் ஊழியத்தை கட்டி எழுப்பினார்கள். பாரா அவர்களே, நீங்கள் சொல்வதெல்லம், உண்மையல்ல.
முடிவுரை: கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுப்பவர்கள் என்ற விஷத்தை நீங்கள் கக்கியுள்ளீர்கள். நீங்கள் எழுதும் பேனாவில் மையை நிரப்பி எழுதுங்கள், விஷத்தையல்ல.
No comments:
Post a Comment