[9] நிலமெல்லாம் இரத்தம் – ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது

(அத்தியாயம் 12. இறைதூதர் முகம்மது)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

ரமளான் மாதத்தின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலமெல்லாம் இரத்தம், 12வது அத்தியாயத்தின் முதல் பத்தியில் நீங்கள் எழுதிய வரிகளை முஸ்லிம்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எப்படி சாத்தியம்? இவ்விவரங்களை நான் அவர்களிடமிருந்து பெற்று தானே எழுதினேன் என்று நீங்கள் கேட்கலாம்.  இதில் தான் டிவிஸ்ட் இருக்கிறது. இக்கட்டுரையை  நீங்கள் முழுவதுமாக படித்தால் "ஒரு சொல், ஒரு வரி, ஒரு குட்டிக்கதையல்ல, ஒரு நாவல் அளவிற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை" என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். சஸ்பன்ஸ் வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள். 

பாரா அவர்கள் எழுதியது:

//முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் - இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. //

பாரா அவர்களுக்கு ஒரு முக்கியமான விவரத்தை சொல்லவேண்டி இருக்கிறது.  இஸ்லாமை புகழவேண்டுமென்பதற்காக, நீங்கள் கிறிஸ்தவ, யூத வேதங்களை தவறாக விமர்சித்தால், அது உங்களுக்கே பிரச்சனையாக மாறும். ஏனென்றால்,  குர்-ஆனின் படி, முஹம்மதுவின் படி, "யூதர்களும், கிறிஸ்தவர்களும்" முந்தைய வேதங்கள் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். மேலும், பைபிளிலிருந்து அனேக விவரங்களை குர்-ஆன் காபி அடித்து மறுபதிவு செய்திருக்கிறது.  முஸ்லிம்களை குஷி படுத்துகிறேன் என்றுச் சொல்லி, ஆபிரகாம், மோசே மற்றும் தாவீது போன்ற பழைய ஏற்பாட்டு நபர்களை விமர்சித்தால், உங்களுக்கு முஸ்லிம்களிடமிருந்து அனேக மிரட்டல்கள் வரும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

1) இயேசு சரித்திரம் புராணமல்ல 

இயேசு ஒரு சரித்திர புருஷராவார்.  இயேசு என்பவர் சரித்திரத்தில் பிறக்கவே இல்லை,  ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் போல இவரும் ஒருவர் என்று சொல்லவருகிறீர்களா? 

புதிய ஏற்பாட்டில் மட்டுமல்ல, அதற்கு வெளியேயும் அதாவது, மதசார்பற்ற சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரித்திர புத்தகங்களில் கூட இயேசு பற்றி எழுதப்பட்டுள்ளது. இயேசு என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார், அவரை சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள் என்று சரித்திரம் சொல்கிறது.  "இயேசுவின்  அற்புதபிறப்பு மற்றும் அவர் செய்த அற்புதங்கள்  என்பவைகள்" மதநம்பிக்கைகள்  ஆகும், ஆனால், இயேசு சரித்திரத்தில் பிறந்தது உண்மை, வாழ்ந்தது உண்மை, அவர் புராணமல்ல, அவர் பரிபூரணம்.

இன்னொரு அன்பான எச்சரிக்கை, இயேசுவின் "அற்புத பிறப்பு ஒரு பொய்யாகும்" என்று அடித்துச் சொல்லாதீர்கள்,  முஸ்லிம்களிடம் அடிபடவேண்டி வரும். ஏனென்றால், முஸ்லிம்கள் கூட இயேசுவின் அற்புத பிறப்பை நம்புகிறார்கள்.  நீங்கள் அதிகமாக புகழ்ந்துத்தள்ளும் முஹம்மது கூட இதையே நம்பினார். எனவே, கிறிஸ்தவம் பற்றி விமர்சிக்கவேண்டுமென்றால், தயவு செய்து சிறிது இஸ்லாமின் மதநம்பிக்கையை ஆழமாக ஆய்வு செய்து கற்றுக்கொண்டு அதன் பிறகு விமர்சியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தபடியாக, பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அற்புதங்களை நீங்கள் மறுக்கலாம், ஆனால், நபர்களை மறுக்கமுடியாது. தேவைப்பட்டால், இத்தொடர் பதில்களை எழுதும் போது ஆங்காங்கே பழைய ஏற்பாட்டோடு, சரித்திரத்தை ஒப்பிட்டு சில விவரங்களை எழுதுவேன். 

பாரா அவர்கள் எழுதியது:

//காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.//

பாரா அவர்களே, ஹதீஸ்கள் பற்றி நீங்கள் தவறாக போதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் அல்லது உங்கள் தொடர்களுக்காக நீங்கள் அதிக அளவில் முஸ்லிம்கள் எழுதிய புத்தகங்கள் மீது சார்ந்து இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகின்றது.  குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களின் நூல்கள் பற்றிய சுருக்கத்தை தமிழில் இந்த கட்டுரையில் படிக்கலாம்: "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

முஹம்மதுவைப் பற்றி அறியவேண்டுமென்றால், உங்களுக்கு குர்-ஆன் உபயோகப்படாது.  ஒரு மனிதனிடம் குர்-ஆனை மட்டும் கொடுத்துவிட்டு, நீ இதைப் படித்துவிட்டு, ஒரு முஸ்லிமாக வாழவேண்டும் என்று சொன்னால், அவன் குர்-ஆனை படித்துவிட்டு, குழப்பத்தில் திருதிருவென்று முழிப்பான்.  அதே போல முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி அறிய ஹதீஸ்களையும், இதர வாழ்க்கை வரலாற்று நூல்களையும் சார்ந்து இருக்கவேண்டும். இஸ்லாமின் பெரும்பான்மையான கோட்பாடுகள் மற்றும் சட்டங்கள் ஹதீஸ்களிலிருந்து வருகிறது.  உங்களுடைய மேற்கண்ட வர்ணனைகள் ஹதீஸ்கள் பற்றியது என்பதில் சந்தேகமில்லை. 

உங்களுடைய சில பத்திகளை படிக்கும் போது எனக்கு என்ன தோன்றியது என்றால்,  முஸ்லிம்கள் அப்பத்திகளை எழுதி உங்களிடம் கொடுத்து, கருத்தை மாற்றாமல் அதனை உங்கள் பாணியில் எழுதும் படி அவர்கள் உங்களைக் கேட்டுக்கொண்டதாக தெரிகின்றது. அல்லது, நீங்கள் அப்பத்திகளை எழுதி, முஸ்லிம்களிடம் கொடுத்து, கருப்பொருள் சரியாக இருக்கின்றதா? இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி மாற்றுங்கள் என்று நீங்கள் அவர்களிடம் சொல்லி, அவர்கள் அதனை சரி பார்த்தபிறகு நீங்கள் பதித்தது மாதிரி தெரிகின்றது. அவ்வளவு இஸ்லாமிய வாசனை அப்பத்திகளில் வெளிப்படுகின்றது.

உங்களின் கீழ்கண்ட வரிகள் ஹதீஸ்கள் பற்றியது என்று தெரிகின்றது. 

//ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.//

2) உங்களின் மேற்கண்ட வரிகளை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்:

அருமை பாரா அவர்களே, நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விட்டு இருக்கிறீர்கள்,  புலி மீது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். புலியைவிட்டு இறங்கினால், அது உங்களை கொன்றுவிடும்.  ஒருவேளை உங்களுக்கு ஹதீஸ்கள் பற்றியும், முஹம்மது பற்றியும் உண்மைகள் இனி தெரிந்தாலும், அதனை வெளிப்படையாக நீங்கள் சொல்லவோ, எழுதவோ முடியாது. 

இப்போது ஹதீஸ்கள் பற்றி தமிழ் முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம். 

நம்பகமற்ற ஹதீஸ்கள்: 

தற்கால சில தமிழ் முஸ்லிம் அறிஞர்களின் படி, உண்மையான ஹதீஸ்கள் என்று கருதப்படும் "புகாரி மற்றும் முஸ்லிம்" தொகுப்புக்களில், அனேக தில்லுமுல்லுகள் நடந்தேறியுள்ளது, அனேக பிழைகள் உள்ளது.  இன்றும் அந்த பிழைகள் அப்படியே உள்ளது. நடைமுறைக்கும் விஞ்ஞானத்திற்கும், அறிவுடமைக்கும் எதிரான விவரங்களை முஹம்மது சொன்னதாக அவைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இப்படிப்பட்ட ஹதீஸ்களை புறக்கணிக்கவேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதையே மேடைகளில் பேசுகின்றார்கள். 

அதாவது,  ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, ஒரு வரி ஒரு சொல் கூட கிடையாது என்று நீங்கள் சொன்னீர்களே, அவைகளில் பொய்கள் உள்ளன, தில்லுமுல்லுகள் உள்ளன, ஆதாரமற்ற அனேக விவரங்கள் உள்ளன என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். முக்கியமாக தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் என்ற இஸ்லாமிய குழு, இப்படி அனேக ஹதீஸ்களை புறக்கணித்துள்ளது, இன்றும் அதனை செய்துக்கொண்டு இருக்கிறது. இவைகள் பற்றி அறிய கீழ்கண்ட தொடுப்புக்களை படிக்கவும்:

3) பாரா அவர்களுக்கு ஒரு அக்னிப் பரிட்சை: 

உங்களுடைய அந்த குட்டிக்கதை வரிகளை நீங்களே மறுத்தால் எப்படி இருக்கும்? "நான் எழுதிய வரிகளுக்காக மனம் வருந்துகிறேன்" என்று நீங்கள் சொல்ல நேரிட்டால் என்ன செய்வது?  உங்களுக்கு ஒரு சின்ன அக்னிப் பரிட்சை, அதாவது நீங்கள் சிரிக்காமல், முகத்தை சுளிக்காமல் கீழ்கண்ட விவரங்களை (ஹதீஸ்களை) படித்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லவேண்டும்.  இந்த பகுதியை படித்துவிட்டு, நீங்கள் எழுதிய வரிகள் சரியானவைகளா? என்பதைச் சொல்லுங்கள்.

1) 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்'

இஸ்லாமைப் போன்ற ஒரு மதத்தை ஸ்தாபித்த முஹம்மது இப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். 

ஸஹீஹ் புகாரி எண் 1144.

1144 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். 

2) ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான்

பாரா அவர்களே, உங்கள் பகுதியில் மசூதி இருந்தால், அதிலிருந்து தினமும் ஐந்து வேளை பாங்கு சத்தம் வருகிறது பாருங்கள், அப்போதெல்லாம், ஷாத்தான் தன் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகின்றானாம்.  இதனை உலக மகா மார்க்கதின் ஸ்தாபர் முஹம்மது அவர்கள் சொல்லியுள்ளார்கள்.  இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

ஸஹீஹ் புகாரி எண்  1231.

1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3) கருப்பு நாய் சாத்தானா? சிவப்பு மற்றும் மஞ்சள் நாய் யார்?

முஹம்மது நாய்களை கொல்லச் சொன்னார்கள்.  தொழுகை செய்யும் மனிதர்களுக்கு முன்பு கருப்பு நாய் வந்துவிட்டால், தொழுகை முறித்துவிடுமாம். ஆனால், சிவப்பு நாய் அல்லது மஞ்சம் நிற நாய் வந்தால் தொழுகை முறியாதாம். கருப்பு நாய் தான் சாத்தான் என்று முஹம்மது கூறியுள்ளார். இப்படிப்பட்ட போதனை செய்பவர் எப்படி இறைவானால் அனுப்பப்பட்ட உண்மையான நபியாக இருக்கமுடியும்? உலகில் உள்ள அனைத்து கருப்பு நாய்களும்  சாத்தான்களா? பாரா அவர்களே, நீங்கள் இந்த ஹதீஸை படித்துவிட்டு, இது உண்மை என்று நம்புகிறீர்களா?

ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:

882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.

4) விவசாயம் செய்வது பாவமா? கலப்பை வீட்டில் இருந்தால் அல்லாஹ் இழிவைக் கொடுப்பாரா?

ஒரு வீட்டில் ஏர் கலப்பையும், இதர விவசாய கருவிகளும் இருந்தால், அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என்று முஹம்மது கூறியுள்ளார். இது என்ன போதனை? இப்படியும் இறைவன் செய்வானா?  உழவுத் தொழில் தான் உலக ஆரம்பகாலத்தில் மனிதன் செய்த தொழில். இதில் என்ன  பாவம் இருக்கிறது? வாய்க்கு வந்தபடி முஹம்மது போதனை செய்துள்ளார். ஏழை விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லையானால், முஹம்மது சோற்றில் கைவைக்கமுடியாது என்பதை அவர் அறியவில்லையா? பாரா அவர்களே இவரை நீங்கள் இறைத்தூதர் என்று நம்புகிறீர்களா?

ஸஹீஹ் புகாரி 2321

2321. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். 

அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். Volume :2 Book :41

5) இதற்காகவும் அல்லாஹ் வசனங்களை முஹம்மதுவிற்கு இறக்குவாரா?

மக்கள் மலம் கழிப்பது, சிறுநீர் போவது, உடலுறவு கொள்வது  போன்றவற்றிற்கு அதிக (தேவையில்லாத) முக்கியத்துவத்தை முஹம்மதுவும் அல்லாஹ்வும் கொடுத்துள்ளார்கள். மக்கள் மலஜலம் கழிக்கும்போது, தங்கள் மர்ம உறுப்பு வானத்திற்கு தென்பட்டு விடுகின்றது என்று வெட்கப்படுகிறார்களாம், எனவே அல்லாஹ் இதற்கு ஒரு வெளிப்பாட்டை கொடுக்கிறார் (குர்-ஆன் 11:5). எந்தெந்த காரணங்களுக்கு அல்லாஹ் காபிரியேல் தூதனை அனுப்பி வசனங்களை இறக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு, தரம் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் இறைவனுக்கு முன்பாக நிர்வாணிகள் தானே, இதனை விளக்குவதற்கு ஒரு வசனம் தேவையோ! இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால், மக்கள்  கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முஹம்மது சொந்தமாக வசனங்களை சொல்லியுள்ளார், இவைகளை காபிரியேல் தூதன் வந்து தனக்கு இறக்கினான் என்றும் பொய்களைச் சொல்லியுள்ளார். இவைகளை உலக மக்கள் படிக்கும் போது சிரிக்கிறார்கள், இவரா இறைத்தூதர்? இவரா தீர்க்கதரிசி? என்று ஆச்சரியப்படுகிறார்கள். அக்காலத்தில் பாலைவனத்தில் மக்கள் நாகரீகம் இல்லாமல், சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்தார்கள். இன்றோ நமக்கு வசதிகள் உள்ளது. இன்று இந்த போதனைகள் எப்படி சரிப்பட்டு வரும்? ஆனால், முஸ்லிம்களோ, முஹம்மது சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இன்றும் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். [30]

ஸஹீஹ் புகாரி 4681 & 4682:

4681. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார். 

இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் 'மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65

4682. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார் 

இப்னு அப்பாஸ்(ரலி) 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என்று இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், 'அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள 'தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்' என்பதன் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர்கள், 'சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகிறதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65

6) கோடை காலத்துக்கும், குளிர் காலத்துக்கும் காரணம் நரகம் தான் 

கோடைக்கும் வாடைக்கும் காரணம் நரகம் என்று முஹம்மது சொல்லியுள்ளார்.  நரகமும் அல்லாஹ்வும்  இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும். இப்படி கற்பனை உரையாடல்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றியவர் முஹம்மது. பாரா அவர்களே, இப்படியெல்லாம் முஹம்மது சொல்லியிருப்பாரா? இது அவர் மீது சொல்லப்பட்ட கட்டுக்கதையல்லவா?

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 1087

1087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.

7) சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் இருந்ததற்காக கல்லறையில் வேதனையடைந்த மனிதன்

எதற்கு தண்டனை தரவேண்டும் எதற்கு தரக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இஸ்லாமின் இறைவன் செயல்படுகிறார். ஒரு முறை முஹம்மது ஒரு சுடுகாட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, இரண்டு மனிதர்கள் கல்லறைக்குள் வேதனைப்பட்டு சத்தமிடுவதை முஹம்மது கேட்டாராம். அதில் ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் கழித்ததினால், அல்லாஹ் இப்படி கல்லறையில் வேதனையை கொடுத்தாராம். இதற்காக, முஹம்மது பேரிச்ச கிளைகளை அவர்களுக்கு அருகில் நட்டு வைத்தாராம். இந்த மட்டைகள் காயாமல் இருக்கும் வரை கல்லறையில் உள்ளே வேதனைப்படும் மனிதர்களுக்கு வேதனை இல்லாமல் இருக்குமாம். இது தான் முஹம்மது சொன்ன கதை. அறிவுள்ள மனிதன் எவனாவது இதனை அங்கீகரித்துக்கொள்வானா? இது கட்டுக்கதையில்லையா பாரா அவர்களே? நிலாவில் வடைசுடும் பாட்டியின் கதைப்போல முஹம்மது கதைகளைச் சொல்லியுள்ளார். 

ஸஹீஹ் புகாரி  216 & 218

216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

218. 'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

8) பல்லியை ஏன் கொல்லவேண்டும்? ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?

ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிக்கதை எப்படி உள்ளதென்று பார்த்தீர்களா? பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்? 

ஸஹீஹ் புகாரி எண்: 3359 & 4509

3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509

4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.

9) மரம் அழுததாம், இறைத்தூதர் ஆறுதல் சொன்னாராம்

முஹம்மது தம் மக்களுக்கு கட்டுக்கதைகளை அதிகமாக சொல்லியுள்ளார். ஒரு பேரிச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி முஹம்மது உரை நிகழ்த்தினாராம். அதன் பிறகு அதை விட்டுவிட்டு வெறு இடம் மாறி உரை நிகழ்த்தினாராம். அப்போது தன்னை முஹம்மது பயன்படுத்தவில்லை என்றுச்சொல்லி அந்த மரம் அழுததாம். அதனை ஆறுதல் படுத்த முஹம்மது அதனிடம் சென்று அதன் மீது கைவைத்து பரிவுடன் வருடினாராம். இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைச் சொன்னவர் முஹம்மது ஆவார்.  மரம் அழுமா? மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார் பாருங்கள்.  இது மட்டுமல்ல, இன்னும் அனேக கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளார் முஹம்மது. பாரா அவர்களே, இது கட்டுக்கதையில்லையா?

ஸஹீஹ் புகாரி 3583

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.

10) தீய கனவுகள் கண்டால் இடப்பக்கத்தில் எச்சில் துப்புங்கள், அப்போது தீங்கு வராது

முஸ்லிம்களுக்கு தீய கனவுகள் வந்தால்,  தங்கள் இடப்பக்கத்தில் எச்சில் துப்பவேண்டுமாம், அதன் பிறகு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டுமாம். அப்போது அவர்களுக்கு தீய கனவினால் எந்த ஒரு தீங்கும் வராதாம். எச்சில் துப்பினால், எப்படி தீய சக்திகள் செயலிழக்கும்? அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது நல்லது தான். ஆனால், எச்சில் துப்புவது என்பது மூடப்பழக்கமாகும். கனவுகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நல்ல கனவும் வரும் தீய கனவும் வரும். இடப்பக்கம் எச்சில் துப்பிவிட்டால் தீமை வராதா? இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை மயக்கிய முஹம்மது எப்படி நபியாக இருக்கமுடியும்? எப்படி மக்களை நல்வழிப்படுத்தும் தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இவர் மக்களை தன் கட்டுக்கதைகளால் மயக்கும் நபராக இருக்கிறார். இவரை நம்பினால், நாமும் நம் படுக்கையின் இடப்பக்கத்தை அவ்வப்போது எச்சிலால் நிரப்பவேண்டியது தான்.  

ஸஹீஹ் புகாரி எண் 3292:

3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59

11) முஹம்மதுவின் சளி, நபித்தோழர்களுக்கு ஃபேர் அண்ட் லௌலி (Fair and Lovely)

முஹம்மது தன் தோழர்களை எந்த அளவிற்கு கீழ்தரமாக நடத்தியுள்ளார் என்று பாருங்கள். முஹம்மது சளியை துப்பினால், அதனை தன் தோழர்கள் கையில் பிடித்துக்கொண்டு, தங்கள் முகத்தில் ஃபேர் அண்ட் லௌலி போல தேய்த்துக்கொள்வார்களாம். தங்கள் உடலில் பூசிக்கொள்வார்களாம். இதனையெல்லாம் கண்டு உள்ளுக்குள் முஹம்மது மகிழ்ந்து இருந்திருப்பார். ஹதீஸ்கள் இப்படி முஹம்மதுவின் சளியை முகத்தில் பூசிக்கொள்வது அவரை கண்ணியப்படுத்துவது ஆகும் என்றுச் சொல்கிறது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் மக்களை கண்டிக்கும் இவர், இப்படி ஆரோக்கியமற்ற செயலைச் செய்யும் இவர்களை தடை செய்யக்கூடாதா? அய்யோ பரிதாபம், எவ்வளவு கீழ்தரமாக மக்கள் நடத்தப்பட்டுள்ளார்கள். மத விஷயத்தில் மக்கள் எவ்வளவு கீழ்தரமாக இறங்கிவிடுகின்றார்கள். எதற்கு எடுத்தாலும் குர்-ஆனில் விஞ்ஞானம் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், முஹம்மதுவின் சளிப் பற்றி என்ன விஞ்ஞான அற்புதத்தைச் சொல்வார்கள்?   முஹம்மதுவை பின்பற்றினால், நாமும் இப்படி செய்யவேண்டி வரும் போல இருக்கிறது. நபித்தோழர்களுக்கு எங்கள்  பரிதாபங்கள் உரித்தாகுக.  பாரா அவர்களே, முஹம்மது இதனை அனுமதித்து இருந்திருப்பாரா? ஆம் என்றுச் சொன்னால், இவர் ஒரு சரியான ஆன்மீக தலைவர் அல்ல. "இல்லை" என்றுச் சொன்னால், இது ஒரு கட்டுக்கதையாகும், அப்படியானால், உங்கள் வரிகளின் நிலை என்ன?

ஸஹீஹ் புகாரி எண்கள்: 2731 & 2732

. . . .அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். . . . . . அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். . . 

12) "தற்காலிக திருமணம் (Temporary Marriage) " என்ற சீர்கேட்டை அனுமதித்த முஹம்மது

திருமணத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது" என்று நாம் பொதுவாக சொல்லுவோம். ஆனால், முஹம்மதுவோ தற்காலிக திருமணம் என்ற பெயரில் ஒரு சீர்க்கேட்டை சட்டமாக அனுமதித்துள்ளார். அதாவது ஒரு மணி நேரம், அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் வரையில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவுக்காக மட்டுமே கணவன் மனைவியாக வாழ்வதை இவர் அனுமதித்துள்ளார். இதனை உலக மக்கள் விபச்சாரம் என்றுச் சொல்வார்கள். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் 5:87ம் வசனத்தையும் சொல்லியுள்ளார். இவ்வசனம் இதனை பரிசுத்தமான செயல் என்றும் கூறுகிறது. போர் செய்யச் சென்ற போது, முஹம்மதுவோடு இருந்த மக்கள் இவரிடம் வந்து, எங்கள் மனைவிகள் தூரமாக இருக்கிறார்கள், நாங்கள் என்ன செய்ய என்று கேட்டபோது, தற்கால திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த செயலை இன்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று இது கேவலமான செயல் என்று எண்ணி சுன்னி முஸ்லிம்கள் பின்பற்றாவிட்டாலும், குர்-ஆன் 5:87 இன்னும் இரத்து செய்யப்படாமல் இருக்கிறது. விபச்சாரத்திற்கு வேறு ஒருபெயர் சூட்டிவிட்டால், அது நியாயமானதாக மாறிவிடுமா? பாரா அவர்களே, இதைப் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ஸஹீஹ் புகாரி எண் 5075, 5116, 5117, 5118 & 5119 & குர்-ஆன் 5:87

5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: 

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87) Volume :5 Book :67

குர்-ஆன் 5:87

5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

13) நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி

அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது.  தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள்.  பாரா அவர்களே, உங்கள் வீட்டில் நெய்யில் எலி விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236

235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

14) எலிகளாக மாறிய யூதர்கள், ஆதாரம் என்ன? அவைகள் ஒட்டக பாலை குடிப்பதில்லை

முஹம்மதுவின் ஆன்மீக ஞானத்தைப் பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்கமுடியாது. ஒரு முறை ஒரு இஸ்ரவேல் குழுவினர் காணாமல் போய்விட்டார்களாம், அவர்கள் எலிகளாக மாற்றப்பட்டு இருப்பார்கள் என்று முஹம்மது நம்புகிறார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால், அந்த எலிகளுக்கு முன்னால் ஒட்டக பாலை வைத்தால் அவைகள் அதனை குடிக்காதாம் (யூதர்கள் ஒட்டக மாமிசம், பால் சாப்பிடமாட்டார்கள்). ஆனால், ஆட்டுப்பால் வைத்தால், அவைகள் குடித்துவிடுமாம். இதனால், அந்த எலிகள் நிச்சயமாக காணாமல்போன இஸ்ரவேல் மக்கள் தானாம்.  என்னே ஞானம், என்னே விளக்கம். யாருடைய காதில் பூவைக்கிறார் முஹம்மது? இப்படியும் ஒரு தீர்க்கதரிசியா? இப்படியும் கட்டுக்கதையா? முஸ்லிம் மதரஸாக்களில் சின்ன பையன்களுக்கு இந்த கதைகளைச் சொல்லி அவர்களை குதூகலமாக்குவார்கள் முஸ்லிம் அறிஞர்கள். அறிவுள்ளவன் இவைகளை நம்பமாட்டான். இப்படி கதைகளை சொந்தமாக அள்ளிவீசிய முஹம்மது எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இந்த ஹதீஸில் ஒரு வரி, ஒரு சொல் கூட கட்டுக்கதையாக உங்களுக்கு தெரியவில்லையா? பாரா அவர்களே!

ஸஹீஹ் புகாரி எண் 3305

3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். 

அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்" என்று நபி(ஸல்) 

அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)" என்றேன்.  அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)" என்று கேட்டேன். 

15) தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துபவரின் தலையை கழுதையைப் போல் அல்லாஹ் மற்றிவிடுகின்றார்

சிறுபிள்ளைகள் பேசிக்கொள்ளும் போது, ஏதாவது தவறு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று பேசிக்கொள்வதை நாம் காணமுடியும். நம்மில் சிலரும் இப்படி பேசி இருப்போம். ஆனால்,  உலகத்திற்கே வழிகாட்டியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது இப்படி பிள்ளைகளைப் போல போதனை செய்வது ஏற்புடையதாக இருக்குமா? " உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடைய தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?" என்று முஹம்மது கூறியுள்ளார்.  தொழுகையில் ஒருவர் தலையை இமாம் உயர்த்துவதற்கு முன்பாக சீக்கிரமாக உயர்த்திவிடுவதினால், அல்லாஹ் இப்படிப்பட்ட கீழ்தரமான தண்டனையை கொடுப்பாரா? உண்மையிலேயே முஹம்மதுவை தீர்க்கதரிசி என்றுச் சொல்பவர்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிறு பிள்ளைகளைப் போல்  போதனை செய்பவரை எப்படி ஒரு நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்?  பாரா அவர்களே, நீங்கள் சொல்லுங்கள்! முஹம்மது இதனை சொல்லியிருக்கமாட்டார் அல்லவா? (ஏன் தான் நிலமெல்லாம் இரத்தம் தொடர்களை எழுதினேனோ! என்று வருத்தப்படுகின்றீர்களா? உங்களுக்கு அந்நாட்களில் இஸ்லாமிய புத்தகங்களைக் கொடுத்து, இஸ்லாமை கற்றுக்கொடுத்தவர்களிடம், ஏனய்யா இப்படிப்பட்ட ஹதீஸ்கள் இருப்பதை எனக்குச் சொல்லவில்லை என்று இன்று கேட்டுப்பாருங்கள், கேட்கும் தைரியமிருந்தால்!)

ஸஹீஹ் புகாரி எண்: 691

691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

16) சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்

அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது.  இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். அதாவது சூரியனுக்கு சமமாக அவளின் கண்களில் வெளிச்சம் இருக்கும்.  இந்த போதனை எப்படிப்பட்டது? ஆண்களுக்கு பெண்களின் மீது ஆசையை உண்டாக்கும் விதமாக பேசுவது சரியா? மேலும், உண்மையிலேயே சொர்க்கத்தில் பெண்களோடு உடலுறவு கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் ஒரு இறையியல் சரியானதா? பரலோகத்தில் ஆண் பெண் உடலுறவு இருக்காது என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இப்படிப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ளவே சொர்க்கம் செல்லவேண்டும் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படியெல்லம் தன் தவறான கோட்பாடுகளினால் மக்களை ஏமாற்றிய இவர் ஒரு தீர்க்கதரிசியா? இவரை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஒரு காலத்திலும் நம்பமாட்டார்கள்.  இந்த ஹதீஸ்கள் பற்றி உங்கள் கருத்தென்ன பாரா அவர்களே!

குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

17) 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்

மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள  எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்?  கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, இப்படி எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. பாரா அவர்களே, சொர்க்கத்தில் அல்லாஹ் கொடுக்க விரும்பும் பெண்களைப் பற்றிய வர்ணனைகளைப் பாருங்கள். எப்படி வசதி! முஸ்லிமாக மாற ஏதாவது ஊந்துகோள்  தெரிகின்றதா? அல்லது இதனை கட்டுக்கதை என்று புறக்கணிக்கப்போகின்றீர்களா? 

குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 3254

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.  Volume :3 Book :59

18) கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.

இஸ்லாம் ஆண்களின் மார்க்கம் என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆண்களுக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஒரு பெண்ணை அவளின்  கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும்போது அவள் சம்மதிக்கவில்லையானால், வானத்திலிருந்து தேவதூதன் வந்து அவளை சபித்துக்கொண்டே இருப்பானாம். காடுகளில் வாழும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் கூட இப்படிப்பட்ட போதனைகள் இருக்காது என்று நம்பலாம். தேவத்தூதர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உலகில் உள்ள முஸ்லிம் வீடுகளில் இரவில் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் அவர்களின் வேலையா? பொதுவாகவே ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள், இந்த இலட்சணத்தில், இப்படி மதத்தை சம்மந்தப்படுத்தி தீய போதனைகள் செய்தால், ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதனால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்னும் உருப்படாமல் பிந்தங்கியே இருக்கிறது. ஆண்களில் சரி பாதியாக இருக்கும் பெண்களை இழிவுப்படுத்தினால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு  சமம் ஆகும். மேலும், பலதார திருமணம், அடிமைகளுடன் விபச்சாரம் புரிவது, அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களை தயார் படுத்தி வைப்பது என்று முஹம்மது அனேக தீய விஷயங்களை சட்டங்களாக மாற்றி போதனைகள் செய்துள்ளார். இப்படி  பெண்களுக்கு எதிராக போதனை செய்த முஹம்மது ஒரு கள்ள நபி என்று நம்ப பாரா அவர்களே, இன்னும் என்னென்ன ஆதாரங்கள் உங்களுக்குத் தேவைப்படும்?

ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 2829 & 2830 

2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. Book : 16

2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. Book : 16

19) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்

முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார்.   "(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்" என்று முஹம்மது கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ  மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி  ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு?  எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார். பாரா அவர்களே, இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை அள்ளி வீசிய முஹம்மது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஸஹீஹ் புகாரி எண் 6551

6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :83

20) நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள்

முஹம்மதுவிற்கு நரகம் காட்டப்பட்டதாம். அதில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள் என்று அவர் கூறுகிறார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது பெண்கள் தங்கள் "'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்" என்று முஹம்மது பதில் அளித்துள்ளார். பெண்கள் பற்றி மிகவும் கேவலமாக முஹம்மது விமர்சித்துள்ளார். முஹம்மதுவிற்கு தெரிந்த ஒரு சில பெண்கள் புரியும் சில செயல்களை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களும் அப்படியே நடந்துக்கொள்வார்கள்  என்று முஹம்மது நினைத்துவிட்டார். இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்கள் மீது ஆதாரப்பட்டு இருப்பார்கள். ஆகையால், இஸ்லாமிய பெண்களை மனதில் வைத்துக்கொண்டு முஹம்மது,  'இது தான் உலக சத்தியம்' என்பது போல போதித்துவிட்டார். ஆண்களின் நிலை என்ன? ஆண்கள் தங்கள் மனைவிகளை நிராகரிப்பதில்லையா? நோகடிப்பதில்லையா? அடிப்பதில்லையா? ஒரு ஆண் மூன்று முறை "விவாகரத்து" என்று சொல்லிவிட்டால், விவாகரத்து நடந்துவிடும் என்றுச் சொல்லும் முஹம்மது, இதே அனுமதியை பெண்களுக்கு கொடுப்பாரா? நல்லவர்கள் கெட்டவர்கள் இருபாலாரிடமும் உண்டு, முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், தீய செயல்களைச் செய்வதில் பெண்களை விட ஆண்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். இதையெல்லாம் அறிந்துக்கொள்ளாமல், தன் மனதில் தோன்றியபடி போதனைச் செய்து, பெண்களை இழிவுப்படுத்தும் முஹம்மதுவை நீங்கள்  தீர்க்கதரிசி என்று நம்புவீர்களா?

ஸஹீஹ் புகாரி எண்: 29

29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2

21) பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்?

நரகத்தில் பெண்கள் தான் அதிகமாக இருப்பார்களாம். இதற்கு அனேக காரணங்கள் உண்டு, அவைகளில் ஒன்று "பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களாம்", அதாவது ஆண்களை விட பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களாம். இது தான் முஹம்மதுவின் போதனை.  ஏன் எங்களுக்கு அறிவு குறைவு என்று பெண்கள் முஹம்மதுவை கேட்டபோது, "சாட்சி சொல்வதில் ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி" என்று முஹம்மது கூறியுள்ளார். முஹம்மதுவின் போதனையின் படி, சாட்சி சொல்வதில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் சமமாகும். இதற்கு இன்றுள்ள முஸ்லிம்கள் சொல்லும் காரணம், பெண்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்பதாகும். இஸ்லாம் ஆண்களுக்கான மதம் என்பதில் இதுவும் ஒரு காரணமாகும். ஆண்களிலும் கோழைகள் இருக்கிறார்கள், பெண்களிலும் வீராங்கனைகள் இருக்கிறார்கள். அறிவு என்பது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அறிவை நாம் வளர்க்கவேண்டும், மூளைக்கு படிப்பு, அனுபவம் என்ற கருவிகளினால் பயிற்சி அளிக்கவேண்டும். இதையெல்லாம் அறியாத ஒரு பாமர மனிதன் சொல்லும் விவரங்களை இறைவன் சொன்னான் என்றுச் சொல்லி, அந்த அறியாமையுள்ள மனிதனை தீர்க்கதரிசி என்று நம்புவது மடமையாகும். இதனை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நம்பவே மாட்டார்கள். ஆண்களுக்கு சமமாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். பெண்களை தவறாக விமர்சிக்கும் ஒரு நபரை கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இவரைப் பற்றி?

குர்-ஆன் 2:282 & ஸஹீஹ் புகாரி எண் 304

2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

ஸஹீஹ் புகாரி எண் 304

304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Volume :1 Book :6

அடிக்குறிப்புக்கள்:

No comments:

Post a Comment

நிலமெல்லாம் இரத்தம் - ஓர் விமர்சனம்

திரு. பா. ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு பதில்கள் நிலமெல்லம் இரத்தம் - விமர்சனம் PDF  (7 MB) [1...