[4] நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்களின் தந்தை இஸ்மாயீல் அல்ல

(அத்தியாயம் 2: ஆப்ரஹாம் முதல் )

மதிப்பிற்குரிய பாரா அவர்களே,

உங்களுடைய 'நிலமெல்லாம் இரத்தம்' புத்தகத்திற்கு இதுவரை இரண்டு விமர்சன கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் அத்தியாயத்தில் நீங்கள் எழுதிய இதர விவரங்களில் உள்ள உண்மையை இப்போது ஆய்வு செய்வோம்.

1. தவளை தன் வாயால் கெடும்:

பாரா அவர்கள் எழுதியது:

//இரண்டு மனைவிகள். இரண்டு ஆண் குழந்தைகள். இதற்கு மேல் என்ன? நிம்மதியாகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, அந்தக் குடும்பம் ஒரே வீட்டிலேயே தழைத்திருந்திருக்கலாம். ஆனால் சக்களத்திப் பிரச்னை இப்போது முன்னைக்காட்டிலும் தீவிரமடைந்துவிட்டது. இது அவரை வருத்தியது.//

நீங்கள் பைபிளில் படித்தது ஒன்று, இங்கு எழுதியது இன்னொன்று. சக்களத்திப் பிரச்னை என்ற இரு வார்த்தைகளால் ஒரு முக்கியமான விவரத்தை மறைத்துள்ளீர்கள்.

பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, (ஆதியாகமம் 21:8-9)

மேற்கண்ட வசனத்தின் படி, இஸ்மாயீல் தன் தம்பியை பரியாசம் செய்தபடியினால், சாராள் ஆபிரகாமிடம் புகார் செய்து, ஆகாரை அனுப்பிவிடும் படி கேட்கிறார்கள். முதல் முறை ஆகார் சாராளை அற்பமாக எண்ணினார், இதனால் சாராள் கடினமாக ஆகாரை நடத்தினார். இரண்டாம் முறை இஸ்மாயீல் ஈசாக்கை பரியாசம் செய்தார், இதனால் வீட்டைவிட்டு போகவேண்டிய நிர்பந்தம் அவர் மீது வந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பார்கள், அது போலத் தான் ஆகாரின் கதையும். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால், எல்லாமே நலமாக நடந்திருக்கும். வேண்டாத விஷயத்தில்! மூக்கை நுழைத்தால், எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கும். ஆகார் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம், ஆகாரும் இஸ்மாயீலும் தான்.  ஆனால், நீங்கள் சக்களத்திச் சண்டை என்ற போர்வையில் அதனை மூடிவிட்டீர்கள். 

2) உண்மையான வாரிசு & வாக்குத்தத்த வாரிசு:

பாரா அவர்கள் எழுதியது:

//ரொம்ப நாள் இச்சிக்கலை இழுத்துக்கொண்டே போகமுடியாது என்று முடிவு செய்தவர், தமது இரண்டாவது மனைவியை ஒருநாள் அழைத்துப் பேசினார். குடும்ப அமைதியின் பொருட்டு அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றும் சொன்னார். என்னதான் அவள், அவருக்கு முதல் முதலில் வாரிசு என்று ஒன்றை உருவாக்கி அளித்தவள் என்றாலும், பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத்தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது.//

ஈசாக்கு உண்மையான வாரிசு என்றுச் சொல்வதைவிட, வாக்குத்தத்த வாரிசு என்றுச் சொல்வது தான் சரியாக பொருந்தும். இஸ்ரேல் பாலஸ்தீனா பிரச்சனையின் மையப்புள்ளி மட்டுமல்ல, எல்லா புள்ளிகளும், தேவன் வாக்குகொடுத்த ஆபிரகாமின் வாரிசு யார் என்பதில் தான் உள்ளது.

இறைவன் வாக்கு கொடுத்தால், நிச்சயம் செய்வார் என்பதை நம்பி சாராள் காத்திருந்திருக்கவேண்டும். இறைவனுக்கு உதவி செய்ய நாமே வலியச் சென்று முயலக்கூடாது. இந்த பார்முலாவை அறியாதபடியினால் தான் சாராள் தன் அடிமைப்பெண்ணை தன் கணவனின் மடியில் கொடுத்தார், இதனால் தன் மடியில் நெருப்பை அள்ளிப் போட்டுக்கொண்டார். வேலைக்காரிக்கு பண உதவி மற்றும் இதர உதவிகள் அனைத்தும் செய்யலாம்,  ஆனால் எஜமானனின் மஞ்சத்திற்கு அனுப்பக்கூடாது. இதனை புரிந்துக்கொள்ளாதபடியினால் தான் சாராளுக்கு பிரச்சனை வந்தது.

பாரா அவர்களே, "பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத் தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது"  என்று நீங்கள் எழுதிய வரியில் கொஞ்சமும் உண்மை இல்லை. இங்கு பிரச்சனை ஆபிகராம் அல்ல. ஒரு வேளை ஆகாரும், இஸ்மாயீலும் தான் பிரச்சனையாக இருந்தார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. இங்கு பிரச்சனை தேவனுடைய வாக்குத்தத்தம் ஆகும். நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததிக்கு இந்த மண்ணை கொடுப்பேன் என்று தேவன் வாக்கு கொடுத்தார். சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் பிறக்கும் பிள்ளையோடு நான் உடன்படிக்கை செய்து, என் வாக்கை நிறைவேற்றுவேன் என்று தேவன் சொன்னார். அவருடைய நேரத்திற்காக காத்திருக்க முடியாத சாராள் மற்றும் ஆபிரகாம், ஆகாரையும் இஸ்மாயீலையும் திரைக்கதையில் நடிக்க வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள். ஆனால், சரியான நேரத்தில் தேவன் ஈசாக்கை நடிக்க அனுப்பிவிட்டார்.

பாரா அவர்களே! இந்த விவரங்களை நீங்கள் படித்திருந்தும், அதனைமாற்றி எழுதியுள்ளீர்கள். ஆகாரையும், இஸ்மாயீலையும் வீட்டைவிட்டு அனுப்பவில்லை,  ஆபிரகாமை விட்டு அனுப்பவில்லை, சாராளை விட்டு அனுப்பவில்லை, வீட்டில் அமைதி வரும் என்பதால் அனுப்பவில்லை. அவர்களை 'ஈசாக்கை' விட்டு அனுப்பினார்கள். இதனை சாராளோ, ஆபிரகாமோ செய்யவில்லை, இதற்கு முழுவதுமாக பொறுப்பு வகித்தவர் "தேவன்".

இஸ்மாயீல் ஈசாக்கை பரியாசம் செய்தபடியினால் தான் வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார் என்பது திரைக்கதையில் நாம் காணும் விவரங்களாகும். ஆனால், திரைக்கு பின்னால் தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றும்படி சரியான காலத்துக்காக காத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட காலம் வரும் போது, ஆகார் மற்றும் இஸ்மாயீல் மூலமாக எந்த பிரச்சனையும் உருவாகாமல் இருந்திருந்தாலும், ஆபிரகாம் இஸ்மாயீலை தனியே அனுப்பிவிடும்படி தேவன் கட்டளை கொடுத்திருப்பார்.  ஏனென்றால், ஈசாக்கு தனியாக வாழவேண்டும் அவனுடைய சந்ததி மற்ற சந்ததிகளோடு கலக்கக்கூடாது.  இது தேவனுடைய திட்டம்.  சில ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவேண்டிய ஒரு விஷயம், இஸ்மாயீல் ஈசாக்கை பரிகாசம் செய்தபடியினால், சீக்கிரமாக நடந்துவிட்டது, அவ்வளவு தான்.  

ஆகாரையும் இஸ்மாயீலையும் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள் என்றுச்சொன்னால், "அவர்களை ஆபிரகாம் நாடு கடத்திவிட்டார்" என்று அர்த்தமல்ல.  இஸ்மாயீலையும் நான் ஆசீர்வதிப்பேன் என்று தேவன் சொன்னதால், அதை நம்பி ஆபிரகாம் தனியாக வாழும் படி அனுப்பினார். வேறுவகையில் சொல்வதென்றால்,  கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமானது.  ஈசாக்கும் இஸ்மாயீலும் ஒரே வீட்டில் அல்லது ஒரு இடத்தில் வாழாமல், தனித்தனியே வாழ்ந்தார்கள், அவ்வளவு தான். ஆபிரகாம் மரித்த போது, இவ்விருவரும் சேர்ந்துதான் அவரை அடக்கம் செய்தார்கள்.

ஆபிரகாம், தனக்கு இருந்த இன்னொரு மனைவியின் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், அவர்களுக்கு தேவையான சொத்துக்களை கொடுத்து ஈசாக்கை விட்டு தூரம் அனுப்பிவிட்டார். ஆக, தேவனுடைய நாடகத்தில் இவர்கள் எல்லோருமே நடிகர்கள் தான். சிலர் செய்யும் தவறுகளால், நாடகத்தின் சில நிகழ்ச்சிகளை தேவன் முன்னமே நடக்கும் படி செய்துவிடுகிறார். ஆனால், திரைக்கதையில் அவர் திட்டமிட்டது தான் கிளைமாக்ஸில் நடக்கும்.

இவைகளையெல்லாம் எனக்கு ஏன் சொல்கிறாய் என்று பாரா கேட்கலாம்! முஸ்லிம்களுக்கு இவைகளை விவரிப்பதை விட, அரைகுறையாக மார்க்க விஷயங்களை எழுதும் உங்களைப் போன்றவர்களுக்குத் தான் முதலாவது இவைகளை சொல்லவேண்டும். அடுத்தமுறை இப்படிப்பட்ட விஷயங்களை எழுதும் போது நடுநிலையோடு எழுதுவீர்கள் என்பதால், இவைகள் பற்றி அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.

பாரா அவர்கள் எழுதியது:

//மறுபேச்சில்லாமல் அந்தப் பெண், தனக்குப் பிறந்த மகனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

அந்தப் பெரியவர் இன்னும் எழுபத்தைந்து வயதுகாலம் வாழ்ந்தார். தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா (Keturah) அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.

கதையென்று நினைத்தால் கதை. வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆனால் இஸ்ரேலிய யூதர்களுக்கும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குமான பிரச்னையின் மூலவித்து மேற்சொன்ன பெரியவரிடமிருந்துதான் தொடங்குகிறது.//

"வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆகாரை சந்தித்து, தேவன் என்ன சொன்னார்?" என்பதைப் பற்றி ஏதாவது ஒரு வரி நீங்கள் எழுதியிருக்கலாம். ஆனால், முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதவேண்டும் என்பது தான் உங்கள் எண்ணமாக இருந்ததால், ஆகாரையும் இஸ்மாயீலையும் அம்போ என்று நடுத்தெருவில் விட்டுவிட்டார்களே! என்று வாசகர்கள் நினைக்கவேண்டும் என்பதால் இப்படி எழுதியிருக்கிறீர்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

//அவர் பெயர் ஆபிரஹாம் (Abraham). அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார் Hagar) அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல் (Ishmael). சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக் (Issacc).

ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)

ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான 'தோரா' (Torah) சொல்கிறது. //

இஸ்மாயீல் தான் அரேபியர்களின் பிதா என்பதற்கு என்ன ஆதாரம்?

ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள், இதில் சந்தேகமில்லை. அரேபியர்கள்  இஸ்மாயீலின் வம்சத்தார்கள் என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இது உண்மையா? இஸ்மாயீலின் வழியில் வந்தவர்கள் தான் அரேபியர்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இன்னும் சில கிறிஸ்தவர்களும் பொதுவாக இப்படித்தான் நம்புகிறார்கள். ஆனால், இதில் உண்மையில்லை. முஸ்லிம்களின் புத்தகங்களை படித்துவிட்டு, இப்படி சரித்திரத்தில் இல்லாத ஒன்றை பாரா அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதர மக்களின் மத நம்பிக்கைகள் பற்றி புத்தகங்கள் எழுதும் போது, ஆய்வு செய்து, எச்சரிக்கையாக எழுதவேண்டும் என்பதை பாரா அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

யூதர்கள் தங்கள் முற்பிதாக்களின் வம்சாவழி பட்டியலை பாதுகாத்தார்கள். அது போல, இஸ்மாயீலின் வழியில் வந்தவர்கள் பாதுகாத்தார்களா? பாரா அவர்களுக்கு "அரேபியர்கள் இஸ்மாயீல் வம்சத்தில் வந்தவர்கள் என்ற " விவரம் எங்கேயிருந்து கிடைத்தது? முஸ்லிம்கள் சொல்வதை ஆய்வு செய்யாமல் அப்படியே எழுதியிருக்கிறார் இவர்.

இஸ்மாயீலின் வம்சாவழியில் வந்தவர்களின் பட்டியல் குர்-ஆனில் காணமுடியுமா? நிச்சயமாக முடியாது. இஸ்மாயீல் பற்றிய குறைந்தபட்ச விவரங்களுக்கும், முஸ்லிம்கள் பைபிளையே நம்பி இருக்கவேண்டியுள்ளது.

இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை என்பதற்கான ஆதாரம்?

பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் கூட அரேபியர்களின் பிதா இஸ்மாயீல் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பொதுவான கருத்து, ஆனால் உண்மையில்லை. பெரும்பான்மையான மக்கள் உண்மை என்று நினைப்பதெல்லாம், உண்மையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை என்பதை விளக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளை கீழே தருகிறேன் (ஆங்கில கட்டுரைகள்). பாரா அவர்கள் இவைகளை படிப்பார் என்று நம்புகிறேன்.

  1. Ishmael is not the Father of Muhammad
  2. Are the Arabs Descendants of Ishmael?
  3. 'Ishmael Is Not the Father Of Muhammad' Revisited
  4. 1. AI Index page – Ishmael
  5. Encyclopedia of Islam Myths: Arabs are not descendants of Ishmael!
  6. Is the Arab nation descended from Ishmael?

தமிழ் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதற்காக, 'ஏன் இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை' என்பதைப் பற்றிய ஒரு சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

1.இஸ்மாயீலின் 12 குமாரர்களின் பெயர்கள் ஆதியாகமம் 25:12-16ல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வட அரேபியா பகுதியில் இதர நாடோடி (nomad) மக்களோடு கலந்துவிட்டார்கள்.

2. இஸ்மாயீலும் அவரது சந்ததிகளும் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். (பார்க்க ஆதியாகமம் 16:12 & 25:18). எகிப்துக்கு கிழக்கு பகுதியில் அசீரியாவிற்கு போகும் வழியில் இருக்கும் பெரிய பகுதியில் வாழ்ந்தார்கள்.

3. ஆதியாகமம் 37:25-28;39:1ல் இஸ்மவேலர்கள் "மீதியானியர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள். நியாயாதிபதிகள் 8:22-24;71:1ல் மீதியானியர்கள் "இஸ்மவேலர்கள்" என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆக, இவர்கள் மீதியானியர்களோடு ஒன்றர‌  கலந்துவிட்டிருந்தார்கள்.

4. ஆபிரகாம் மற்றும் இஸ்மாயீல் பிறப்பதற்கு முன்பிலிருந்தே அரேபியா தீபகர்ப்பத்தில் மக்கள் நாடோடிகளாக (nomed) வாழ்ந்துள்ளார்கள். 

5. இஸ்லாம் சொல்வது போல, அரேபியர்கள் எல்லோரும் இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் என்று கருதினால், ஆபிரகாமுக்கு முன்பிலிருந்தே அரேபியாவில் வாழ்ந்த மக்கள் என்னவானார்கள்? இஸ்மாயீலுக்கு முன்பாக வாழ்ந்த‌ அரேபியர்கள் எங்கே போனார்கள்?

6. அரேபியர்கள் இஸ்மாயீலுக்கு பிறப்பிற்கு முன்பாகவே இருந்துள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.  இஸ்மாயீல் வம்சத்தார்கள் வட அரேபியாவில் வாழ்ந்தார்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே வாழ்ந்துக்கொண்டு இருந்த அரேபியர்களோடும், இதர மக்களோடும் ஒன்றர கலந்துவிட்டார்கள்.

7. சரித்திர மற்றும் தொல்பொருள் ஆய்வுகளின்படி, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவிற்கு இஸ்மாயீல் சென்றதாக எந்த ஒரு தடயமும் இல்லை. அவர் அரேபியர்களின் தந்தையாக இருந்தார் என்பதும் பொய்யான தகவலாகும். முக்கியமாக, தற்கால அரேபிய சரித்திர தொல்பொருள் நிபுனர்களின் படி, முஹம்மதுவிற்கு முன்பு வரை, அரேபிய மக்களின் பிதாவாக "கஹ்தன்" என்பவர் கருதப்பட்டார் இஸ்மாயீல் அல்ல.

இஸ்லாமிய நூல்களிலிருந்து சில ஆதாரங்கள்:

மேலே சொன்ன ஆதாரங்கள், பைபிள் மற்றும் பைபிளுக்கு வெளியேயிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இப்போது இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல என்பதை நிருபிக்க இஸ்லாமிய ஆதாரங்களின் சுருக்கத்தைக் காண்போம்.

1. இஸ்மாயீல் மற்றும் ஆகார் அவர்களை மக்காவையில் விட்டுவந்தாராம் ஆபிரகாம் (இஸ்லாமுக்கு வெளியே இதற்கு எந்த ஒரு சரித்திர ஆதாரமுமில்லை).

2. குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் வஹியாக முஸ்லிம்களால் பிரதானமாக கருதப்படும் புகாரி ஹதீஸின் படி (முஹம்மதுவின் படி), மக்காவில் இஸ்மாயீல் இதர மக்களிடமிருந்து அரபி மொழியை கற்றுக்கொண்டாராம். இந்த விவரம் முஹம்மதுவிற்கு எப்படித் தெரியும்? என்று கேட்டால், அல்லாஹ் தான் இவருக்கு சொல்லியிருக்கிறார். இப்படித் தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆக, அல்லாஹ்வின் படி, இஸ்மாயீல் அரபி மொழியை ஏற்கனவே அரேபியாவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளார். இந்த ஹதீஸ் பொய் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா? கொஞ்சம் கேட்டுச்சொல்லமுடியுமா?

புகாரி ஹதீஸ்: 3364

. . . குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். . . .

1. அரபி மொழி பேசும் மக்கள் அரேபியாவில் இருந்துள்ளார்கள், அவர்களிடமிருந்து அரபியை அவர் கற்றுக்கொண்டுள்ளார். இதன் படி, அரேபியர்கள் இஸ்மாயீலுக்கு முன்பாக அரேபியாவில் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரியவில்லையா? ஆக அரபி மொழி என்பது இஸ்மாயீலின் தாய் மொழி அல்ல என்பது முஸ்லிம்களின் நூல்களிலிருந்தே நிருபிக்கப்பட்டுவிட்டது.

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களின் நூல்களிலிருந்து ஆதாரம்: இப்னு இஷாக், தபரியின் சரித்திரம், இப்னு ஹிஷம், இப்னு சைத்

கீழ்கண்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய ஆரம்பகால சரித்திர நூல்களிலிருந்து ஆறுவகையான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல என்பதை இதன் மூலமும் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த படத்தின்படி, இஸ்மாயீலுக்கு முன்பிலிருந்தே அரேபியர்கள் இருந்துள்ளார்கள். மேற்கண்ட கட்டுரையையும், இந்த படத்தையும் படித்துப் பாருங்கள், அப்போது உண்மை விளங்கும்.

முடிவுரை:

பாரா அவர்களே, சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல, அவர் பிறப்பதற்கு முன்பிலிருந்தே, அரேபியர்கள் இருந்துள்ளார்கள், அரபி மொழி இருந்துள்ளது. அரேபியா முழுவதும், மக்கள் நாடோடிகளாக, கூடாரவாசிகளாக அரபி பேசிக்கோண்டு வந்துள்ளார்கள். இஸ்மாயீலும் அவரது வம்சத்தார்களும் இதர குழுக்களோடு கலந்துவிட்டார்கள், முக்கியமாக வட அரேபியாவில் வாழ்ந்தார்கள். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மாயீல் அரேபியர்களின் முற்புதா அல்ல, அதற்கு பதிலாக, இவர் அரேபிய மக்களில் ஒன்றர கலந்துவிட்டார். விஷயம் இப்படி இருக்கும் போது, முஹம்மது இஸ்மாயீல் வம்சத்தில் தான் வந்தார் என்பதும் நம்பத்தகாத சரித்திர ஆதாரமில்லாத கூற்றாகும். இதைப் பற்றி மேலும் அறிய மேலே கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும், இன்னும் ஆய்வு செய்யவும்.


No comments:

Post a Comment

நிலமெல்லாம் இரத்தம் - ஓர் விமர்சனம்

திரு. பா. ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு பதில்கள் நிலமெல்லம் இரத்தம் - விமர்சனம் PDF  (7 MB) [1...